search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை சாலை மறியல்"

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே இன்று காலை டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்ததால் கந்தர்வக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்த ஊரணிபுரத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகே பணிகொண்டான் விடுதி, வெட்டுவா கோட்டை, திருவோணம், கீழ ஊரணிபுரம், மேல ஊரணிபுரம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன.

    இந்த பகுதியில் கடந்த ஆண்டு 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஊரணிபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த 3 டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டன.

    இந்த நிலையில் ஊரணிபுரம் கல்லணை கால்வாய் பகுதியில் புதிதாக 2 டாஸ்மாக் மதுபான கடைகள் அமைக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்டன. முன் அறிவிப்பு இல்லாமல் இந்த கடைகள் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த டாஸ்மாக் மாணவ- மாணவிகள், பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததால் ஊரணிபுரம் கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லணை கால்வாய் பெரியாற்று பாலத்தில் திரண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளி சீருடையுடன் வந்து மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி அவர்கள் கோ‌ஷமிட்டனர். இதில் விவசாய சங்கத்தினரும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்ததால் கந்தர்வக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியல் போராட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமல கண்ணன், தாசில்தார், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றினால்தான் போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என்று உறுதியாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
    ×